34. பாளையுடைக் கமுகோங்கி -  பாடல் 4

திருச்சதகத்தின் பாடல் ஒன்றினில், மணிவாசகர் நிலையில்லாத உலகப் பொருட்களின் இடையில் சிக்குண்ட தான் மயங்குவதாகவும்,
Published on
Updated on
3 min read

பாடல் 4

வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்றெண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

விளக்கம்

இந்தப் பாடலில் சிவபிரானின் பெயர் நந்தி என்று அப்பர் குறிப்பிடுவதை நாம் காணலாம். நந்துதல் என்றால் அழிதல், குறைதல் என்று பொருள். நமது வினைகளை நந்தச்செய்யும் ஆற்றல் படைத்த காரணத்தால் சிவபெருமானை நந்தி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். திருமூலரும் பல இடங்களில் சிவபெருமானை நந்தி என்று அழைக்கின்றார். தனது வினைகளை அடியோடு களைந்து, பிறவிப் பிணியினை தீர்த்து தனது அச்சத்தை போக்கிய சிவபெருமானை, வினைகளை அழித்தவன் என்ற பொருள்பட நந்தி என்று மிகவும் பொருத்தமாக அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். உந்தி = கொப்பூழ்.

நமது வாழ்வில் தேவையான சமயத்தில் பயன்படக்கூடிய செல்வம் நமச்சிவாய என்னும் சொல் என்பதைத் தான் உணர்ந்ததால், தனது எதிர்காலம் பற்றிய அச்சம் ஏதும் இல்லாமல் தான் இருப்பதாக கூறும் அப்பர் பிரான் அவ்வாறே நாமும் பயப்படாமல் இருப்பதற்கு நமக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுப்பதை இங்கே உணரலாம். வைச்ச பொருள் = வயது முதிர்ந்த காலத்திலும் உடல் வலிமை குன்றிய காலத்திலும் பயன்படுவதற்காக சேமிப்பாக நாம் வைத்துள்ள பொருள். அருளாளர்கள் பொதுவாகப் பயப்படுவது அடுத்த பிறவி ஒன்று எடுக்க நேரிடுமோ என்பதுதான். பஞ்சாக்கர திருநாமத்தைத் தான் உச்சரித்து வந்ததால், தனக்கு அந்த பயம் நீங்கியது என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். நமச்சிவாய என்ற சொல்லை தன்னுள் கொண்டுள்ள அப்பர் பிரானின் பாடல்களில் இதுவும் ஒன்று. மூவர் அருளிய நமச்சிவாய பதிகங்களைத் தவிர (காதலாகிக் கசிந்து – சம்பந்தர்; சொற்றுணை வேதியன் - அப்பர் பிரான்; மற்று பற்று எனக்கின்றி - சுந்தரர்) நமச்சிவாய என்ற சொல்லை பயன்படுத்தியுள்ள பாடல்கள் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பெட்டிக்குள் போடவும் – மொத்தம் 4 காலங்கள்.

பாடல் எண் ஆசிரியர் தொடக்கச் சொற்கள் தலம்

4.77.4 அப்பர் பிரான் சந்திரன் சடையில் வைத்த பொது

4.80.4 அப்பர் பிரான் வைச்ச பொருள் நமக்காகும் தில்லை

4.103.3 அப்பர் பிரான் தூமென் மலர்க்கணை நாகை

4.90.2 அப்பர் பிரான் நமச்சிவாயவே ஞானமும் பொது

5.97.22 அப்பர் பிரான் நமச்சிவாயவே என்பவர் பொது

6.93.10 அப்பர் பிரான் தந்தையார் தாயாருடன் பொது

6.98.4 அப்பர் பிரான் உறவாவர் உருத்திர பொது

8.5.62 மணிவாசகர் போற்றி ஓம் நமச்சிவாய திருச்சதகம்

8.23.7 மணிவாசகர் மாயனே மறிகடல்விடம் செத்திலாப் பத்து

கடும்பகல் நட்டம் ஆடி என்று தொடங்கும் பதிகத்தின் நான்காவது பாடலில் (4.77.4) சிவபெருமானின் மந்திரமாகிய நமச்சிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து திருநீறு அணிந்தால், நெருப்பில் இடப்பட்ட விறகு போன்று நமது வினைகள், நோய்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நமச்சிவாய மந்திரத்தைச் சொல்லியவாறே திருநீறு அணியவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல்.

சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி

அந்தரத்து அமரர் பெம்மான் நல் வெள்ளூர்தியான் தன்

மந்திர நமச்சிவாயவாக நீறு அணியப் பெற்றால்

வெந்து அறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகு இட்டன்றே

திருச்சதகத்தின் பாடல் ஒன்றினில், மணிவாசகர் நிலையில்லாத உலகப் பொருட்களின் இடையில் சிக்குண்ட தான் மயங்குவதாகவும், சிவபிரானைத் தவிர புகலிடம் தனக்கு ஏதும் இல்லாமையால், சிவபெருமான் தன்னை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டு, நமச்சிவாய மந்திரத்தின் பொருளாய் உள்ள சிவபிரானே என்று அழைக்கின்றார்

போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி

செத்திலாப்பத்து பதிகத்தின் ஏழாவது பாடலில் மணிவாசகர் சிவபெருமானின் திருவடிகளை எப்படிப் பணிய வேண்டும் என்று நமக்கு சொல்லிக்கொடுக்கின்றார். நமச்சிவாய என்று அவனது பஞ்சக்கார திருநாமத்தை சொல்லியவாறே அவனைப் பணிய வேண்டும் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தங்களை பேயன் என்றும் நாயேன் என்றும் தாழ்த்திக் கூறிக்கொள்வது அருளாளர்களின் இலக்கணம். அந்தவகையில்தான் மணிவாசகர் தன்னை பேயன் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் உண்மையில் பேயன் யார் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. சிவபெருமானை மனத்தால் நினைத்து, நமது வாயால் நமச்சிவாய என்று அவனது திருநாமத்தைச் சொல்லி, உடலால் அவனை பணிந்து வணங்க வேண்டும். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடாதவர்கள் தான் பேயன். திருபெருந்துறையில், தன்னை ஆட்கொண்டு, உபதேசமளித்து பின்னர் மறைந்து விட்டமையால் மாயன் என்று இறைவனை குறிப்பிடும் மணிவாசகர், திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு பின்னர், எவ்வாறு இறைபணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருந்ததால்தான், பெருநெறி (முக்திநெறி) காட்ட வேண்டும் என்று உரிமையுடன் சிவபிரானைக் கேட்கின்றார். இறைவன் தன்னை அவரது அருகில் அழைத்துக் கொள்ளாததால், தான் அவரிடமிருந்து தொலைவில் நின்று அவரது அருளினை வேண்டி அலறுவதாக கூறுகின்றார்,

மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மனிகண்டத்து எம் அமுதே

நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன்னடி பணியாப்

பேயனாகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனேயோ

சேயனாகி நின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே

பொழிப்புரை

நமக்கு ஆபத்து காலத்தில் பயன்படும் பொருளாக விளங்கும் என்று, நமச்சிவாய மந்திரத்தை மறுபடியும் மறுபடியும் உச்சரித்தேன்: அதனால் என்னை பிடித்திருந்த பிறவிப்பிணி விலகியது. எனவே அடுத்த பிறவி எடுக்க நேரிடுமோ என்ற அச்சம் எனக்கு இல்லை. உலகத்திற்கே அணிகலனாக விளங்கும் தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் ஆடுகின்ற சிவபெருமான் நந்தி என்று அழைக்கப்படுகின்றான். அவன், அடியார்களுக்கு அளவு கடந்து உதவி செய்து பித்தனைப் போன்று நடந்துகொள்பவன். அவன் பிறப்பு இல்லாதவன். அவனது கொப்பூழின் மேல் வரும்படியாக இடுப்பில் கட்டப்பட்டுள்ள, நடனத்தின் போது அசைந்து ஆடும், கச்சின் அழகினைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியை விட உயர்ந்த காட்சி வேறேதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com